“என் அப்பாவின் கதையையோ, என் தாத்தாவின் கதையையோ சொல்ல எனக்கு உரிமை உள்ளது”- மாரி செல்வராஜ்
எனக்கென்று ஒரு தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது. என் கதையையோ, என் அப்பாவின் கதையையோ, என் தாத்தாவின் கதையையோ சொல்ல எனக்கு உரிமை உள்ளது என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆவேசமாக பதிலளித்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டிபிவி திரையரங்கில் இயக்குநர் மாரி செலவராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் வந்த அவர், திரையரங்கினுள் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது படம் மக்களிடம், திரைப்பட விநியோகஸ்தர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும் மக்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாடுகிறார்கள். எது சரி, எது தவறு என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தங்களுக்கு ஒவ்வாத விஷயத்தை எவ்வளவு பெரிய படைப்பாளி கொடுத்தாலும் மக்கள் நிராகரிப்பார்கள். ஒவ்வொரு திரைப்படத்தின் போதும், தமிழ்ச் சமூகம், இந்திய சமூகத்தை மனதில் வைத்து தான் திரைக்கதை எழுதுவேன். ஒரு படத்தை இரண்டரை மணி நேரக் கொண்டாட்டமாக நினைக்க மாட்டேன். ரசிகனை போதையில் வைத்திருப்பதோ, தன்னிலை மறக்கச் செய்வதோ எனது வேலை கிடையாது. சினிமா என்பது தன்னிலை மறத்தல் கிடையாது. எதாவது ஒரு வகையில் ரசிகனுடன் உரையாட வேண்டும் என எண்ணுவேன். பார்வையாளனை மழுங்கடித்து சர்க்கஸ் காட்டுவதற்காக நான் வரவில்லை. எனக்கென பொறுப்பு இருக்கிறது. இது கடினமான வேலைதான்.
நகரம், கிராமம் என நான் பார்த்துப் படம் எடுப்பதில்லை, தமிழ் சினிமா மட்டும் நான் பார்த்துக் கற்றுக் கொள்ளவில்லை, நானும் உலக சினிமா எல்லாம் பார்பபன் தான், சொல்ல வேண்டிய கருத்தை ஆணித் தரமாக சொன்னாலே படம் வெற்றி பெறும். எனக்குத் தெரியாத விஷயத்தில் ஆர்வமாக செயல்பட முடியாது. அந்நியன் மாதிரி திரைப்படம் எடுக்க நான் விரும்பவில்லை, அது மாதிரி படம் எடுக்க ஆள் நிறைய இருக்கிறார்கள். இது போன்ற படத்தை எடுக்க என் போன்ற சிலர்தான் இருக்கிறார்கள். என்னைத் தூங்க விடாமல் செய்யும் கருத்துக்களை படமாகத் தொடர்ந்து எடுப்பேன். எனக்கென்று ஒரு தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது. என் கதையையோ, என் அப்பாவின் கதையையோ, என் தாத்தாவின் கதையையோ சொல்ல எனக்கு உரிமை உள்ளது. மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவர் என்ற Stamp குத்தப்படும். அந்த Stamp-ஐ நான் வரவேற்கிறேன்” என்றார்.


