‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ மறைந்தார் வெற்றிப்பாடலுக்கு சொந்தக்காரர்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள கவிஞர் பிறைசூடன் காலமானார்.

இளையராஜா, எம்.எஸ்.விஸ்வனாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய பிறைசூடன், பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டுமின்றி, கவிஞர், நடிகர், உரையாடல் ஆசிரியர், ஜோதிடர், ஆன்மீக பற்றாளர் என பன்முகங்களை கொண்டவர் பிறைசூடன்.‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தற்போது நடித்து முடித்த‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இவருடைய அப்பா காவல்துறையில் பணியாற்றியவர். இதனால் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருச்சி ஆகிய பல்வேறு இடங்களில், படிப்பை முடித்த இவர், வாழ்வாதாரத்துக்காக சென்னை வந்து, கோடம்பாக்கத்தில் குடிபுகுந்தார். பத்திரிக்கையாளர் ராம்ஜி மூலமாக இவருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகமாக அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார் பிறைசூடன். இவருடைய முதல் பாடல் ‘ராசாத்தி ரோசாப்பூ...’ ஜெமினி ஒலிப்பதிவுக்கூடத்தில் ஏசுதாஸ்- வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்கத் துவங்கியது.
இளையராஜா இசையில் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ படத்துக்கு இவர் எழுத, லதா மங்கேஷ்கர் குரலில் பாட்டு பதிவானது. படம் வெளிவரவில்லை. பின்னர் இளையராஜா இசையில் ‘எங்க ஊரு காவக் காரன்’ படத்தில் எழுதிய ‘சிறுவாணி தண்ணி குடிச்சு...’ பாடல் இவரது பெயரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து 80களில் இசைக்கொடி நாட்டி ஆண்டுகொண்டிருந்த இளையராஜா இசையில் ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பிறைசூடன் எழுதியதுதான். இதற்கடுத்த ஆண்டில் ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை திருமண வரவேற்பு மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடலாகத் திகழ்கிறது.
![]()
1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் அவர் எழுதியதே.
அதே ஆண்டில் ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் சேர்ந்து பிறைசூடனின் வரிகளும் காதல் தோல்வியின் தீரா வலியை கேட்பவர் அனைவரையும் உணர வைத்தது. ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என அந்த ஆண்டில் பிறைசூடன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்களின் பட்டியல் நீள்கிறது.
’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பிறைசூடன் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற வெற்றிப் பாடல். ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.


