பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்!
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை எழுதியுள்ளார். 1985 ஆம் ஆண்டு வெளியான சிறை திரைப்படத்தில் ராசாத்தி ரோசா பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். பிறைசூடன் எழுதிய 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்' என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. சோல பசுங்கிலியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா போன்ற பாடல்களையும் இயற்றினார். எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ,ஆர் ரகுமான், தேவா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியுள்ளார்.

திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் 5 ஆயிரம் பக்தி பாடல்களையும் தொலைக்காட்சி தொடர்களுக்கான பாடல்களையும் இயற்றியுள்ளார். இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலைச் செல்வம் என்ற விருதும் வழங்கப்பட்டது. மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசின் கபிலர் விருதும் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகில் போற்றப்படும் பாடலாசியர்களுள் ஒருவராக திகழ்ந்த பிறைசூடன் மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


