6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அலர்ட் கொடுக்கும் வெதர் ரிப்போர்ட்!!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (நவ.16) வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.