வங்கக்கடலில் வலுப்பெற்றது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( 15 -ஆம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது, அதன்படி தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வரும் இது, அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ( 16 - 17 ஆம் தேதி) வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் எனவும், இதனால் வட தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று, ( அக்.15) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.



