"வீட்டுக்கு போனா அப்பா கொலை பண்ணீருவாரு.." காதலனுடன் ஓடி வந்த தொழிலதிபர் மகள்

 
Lovers

காரைக்காலில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, நீதிமன்றத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் தீபிகா (19). அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியைச் சேர்ந்த கௌதம்(22) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெண்ணின் வீட்டிற்கு காதல் சம்பவம் தெரிய வந்தது. இதனால் பெண்ணை பெற்றோர் கண்டித்து உள்ளனர்‌. இதனால் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி காரைக்காலில் தஞ்சம் அடைந்தனர். 

இதனை அடுத்து பெண்ணின் பெற்றோர், சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், மீட்டு தர கூறியும் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சென்னை போலீசார் காரைக்கால் வந்து தீபிகாவை அழைத்து செல்ல முயன்றுள்ளனர். இதனால் தீபிகா தனது காதலன் கெளதமனுடன் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளே நுழைந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். சென்னை போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, நீதிமன்றத்தில் இருந்த சக வழக்கறிஞர்கள் அவர்களை தடுத்து விசாரணை செய்தனர். அப்போது காதல் ஜோடி தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்தனர். மேலும் நாங்கள் திருமண பதிவு செய்துவிட்டோம் என்றும் பெற்றோர் தங்களை மிரட்டுவதால் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம் என்றும் தீபிகா கூறினார். 

இதையடுத்து சென்னை போலீசாரை தடுத்த வழக்கறிஞர்கள், ஜோடியை மீட்டு நீதிமன்றத்துக்குள் அழைத்து சென்றனர். பின்னர் போலீசாரிடம் நீதிமன்றத்திற்குள் அவர்களை பிடிக்க கூடாது என்றும் அவர்கள் திருமண செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து பெண்ணின் உறவினரிடம் அந்த பெண்  நீதிமன்ற வாயிலிலேயே, தான் அணிந்திருந்த ஜெயின், தோடுகளை அவிழ்த்து கொடுத்துவிட்டு எனது கணவருடன் செல்கிறேன் என்று கூறி உள்ளார். பின்னர் சென்னை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி கிளம்பி சென்றனர்.