லவ் பேர்ட்ஸ் தகராறு - 12 வயது சிறுவன் தீக்குளிக்க முயற்சி

 
k

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் 12 வயது சிறுவன் தனது தாயுடன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.  லவ் பேர்ட்ஸ் குஞ்சுகளை திருடியதாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தற்கொலை முயற்சி நடந்திருக்கிறது.

ku

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈத்தா மொழியை அடுத்த பெரிய காடு சர்ச் தெரு.   இந்த தெருவில் வசித்து வரும் ராமன் -கௌசல்யா தம்பதியின் 12 வயது மகனும், மகளும் பக்கத்து வீட்டு  லவ் பேர்ட்ஸ் குஞ்சுகளை திருடியதாக சொல்லி பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி அந்த சிறுவனையும் அந்த சிறுமியையும் தாக்கி இருக்கிறார்கள்.   வீட்டிற்கு வெளியே நின்று இருந்த இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.  

 சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி பேசியதாகவும் கூறுகிறார் சிறுவனின் தாய்.   இதை அடுத்து ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தாயும் 12 வயது சிறுவனும் தீக்குளிக்க முயற்சித்து உள்ளனர். அப்போது  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து கௌசல்யாவின் கையில் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி விட்டு அவர்களை மீட்டுள்ளனர்.

 தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அப்படி எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் மீண்டும் வந்து தீக்குளிப்பேன் என்று கூறியிருக்கிறார் கௌசல்யா .  இதை அடுத்து போலீசார் நேசமணி காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.   அங்கு போலீசார் தாய், மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.