புதிய கட்சி,தவெகவுடன் கூட்டணி: புதுவையில் பரபரப்பை கிளப்பும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. தவெகவில் இணைவதற்கு முன்பாக விசிகவில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை விளாசினார். இதனால் விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதன்பின்னரே தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். இதன்பின் முழுக்க முழுக்க திமுகவை அட்டாக் செய்து வரும் ஆதவ் அர்ஜுனா, பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டினின் மருமகன். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா குறித்து லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் அவர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த நேர்காணலில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளை ஆதவ் அர்ஜூனா விமர்சித்து வருவதுடன், மறுபுறம் அந்தக் கட்சிகளுடன் நெருக்கமாகவும் இருக்கிறார். ஆனால், "நான் பேசுவதற்கும், மார்ட்டின் குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று ஆதவ் அர்ஜூனா தெளிவாக விளக்கமளிக்காததால், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் தனது தந்தை மார்ட்டினும், குடும்பத்தினரும் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இதனால் தங்கள் குடும்பமும் பாதிக்கப்படுவதால், ஆதவ் அர்ஜூனாவின் செயல்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக கூறினார்.
புதுச்சேரியில் நடிகர் விஜய் தனக்கென ஒரு செல்வாக்கைக் கொண்டுள்ளதால், அவரது கட்சியுடன் (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி அமைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆம். இதுகுறித்து, விஜய் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட பிறகு, அவர்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று கூறியுள்ளார். இதனால் இந்த 2 கட்சிகள் விரைவில் கூட்டணிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
"உங்கள் கைக்கு அதிகாரம் வந்தால் புதுச்சேரிக்காக என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், புதுச்சேரியில் சரியான பாதுகாப்பு இல்லாததால், முதலில் சட்டம் - ஒழுங்கு சீரமைக்கப்படும் என்று கூறினார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால், உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும், முதலீடுகளும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, 'அனைவருக்கும் வீடு' என்ற திட்டமும் தங்கள் எண்ணத்தில் இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
பாஜக உங்களை தங்கள் 'பி டீம்' அளவிற்கு தயார்படுத்தி வருவதாகவும், ரங்கசாமிக்குப் பதிலாக முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் அக்கட்சி இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறதே, அது உண்மையா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இது முழுக்க முழுக்கப் புரளி. நாங்கள் பாஜக-வையும் எதிர்த்துதான் அரசியல் செய்கிறோம்" என்று திட்டவட்டமாக கூறினார்.


