தீயாய் பரவிய வதந்தி - சூறையாடப்பட்ட சீட்டு கம்பெனி! தீபாவளி நேரத்தில் கதறும் ஓனர்

 
ஓனர்

செய்யாறை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் தீபாவளி பண்டு சீட்டு கட்டிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய பொருட்கள் காலதாமதம் ஆனதால் நிதி நிறுவனம் மற்றும் குடோன்களில் இருந்து பொருட்களை அள்ளிச் சென்ற வாடிக்கையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.பி.ஆர் தனியார் நிதி நிறுவனம் இந்நிறுவனத்திற்கு செய்யாறு வந்தவாசி ஆரணி காஞ்சிபுரம் திருவண்ணாமலை திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் ஏ முதல் ஜே வரையிலான மாதாந்திர கவர்ச்சிகரமான பண்டு நடத்தி வந்துள்ளனர் இந்த கவர்ச்சிகரமான பண்டு திட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக மாதம் தோறும் 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான திட்டத்தில் சேர்ந்து மாதா மாதம் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இது போன்ற திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இந்த நிறுவனம் பண்டு பொருட்களை ஆண்டுதோறும் வழங்கியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேல் அதிகரித்ததுள்ளது. இது போன்ற கவர்ச்சிகரமான திட்டத்திற்கு பல மாவட்டங்களில் ஏஜெண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் 50 முதல் 100 வரையிலான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு தலா ஒரு பண்டு இலவசம் மற்றும் தங்க நாணயம் இரண்டு சக்கர வாகனம் என்றும் பலவிதமான சலுகைகளை ஏஜெண்டுகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. அதனால் ஒவ்வொரு ஏஜெண்டும் தலா ஆயிரம் முதல் 5000 வரையிலான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்ட் சீட்டு பெறுவதற்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கேட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் முழு பொருட்களையும் கொடுக்காமல் குறைவான பொருட்களை பாதி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர். அந்நிறுவனம் மேலும் பொருட்கள் இல்லாததால் சில தினங்களுக்கு மேலாக பொருட்கள் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இன்று காலை அந்நிறுவனத்தின் முன்பு கூடிய உள்ளனர். மேலும் அவர்களில் சிலர் அந்நிறுவனத்தின் கதவுகளை உடைத்து சிட்பண்ட் நிறுவனத்தின் உள்ளே இருந்து டேபிள் ஃபேன் ஏசி உள்ளிட்ட பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர். அதன் அருகில் இருந்த அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் பொருட்கள் வழங்க கூடிய குடோன்களில் இருந்து மக்கள் பொருட்களை அள்ளிச் சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு இருந்த மக்களை அப்புறப்படுத்தினர். மேலும் மதியம் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சாலையில் தலைமை இடமாக அமைந்துள்ள அந்நிறுவனத்தின் முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை கலைய செய்தனர். இதனிடையே அந்நிறுவனத்தின் உரிமையாளர் அல்தாப் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, “தான் எங்கும் ஓடி ஒழியவில்லை. தீபாவளி பொருட்கள்  வழங்குவதற்காக சென்னை சென்று பொருட்களை வாங்கி வரவே சென்றுள்ளேன். அதற்குள் தனது நிறுவனம் மற்றும் அதைச் சார்ந்த கட்டிடங்களில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி பல லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளிச் சென்றது வேதனை அளிக்கிறது” என வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

தாங்கள் நிறுவனத்தின் மீது மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார.  மேலும் ஒரு வார காலத்திற்குள் விடுபட்ட வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பொருட்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார், இதனிடையே அந்நிறுவனத்தின் முன்பு கூடி இருந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்ததாவது இந்நிறுவனத்தில் இருந்து பொருட்களை அள்ளிச் சென்றது வாடிக்கையாளர்களோ அல்லது ஏஜென்ட்களோ இல்லை எனவும் அடையாளம் தெரியாத நபர்கள் மட்டுமே பொருட்களை அள்ளி சென்றதாகவும் பேட்டி அளித்துள்ளனர்.