இன்று இரவு வானத்தைப் பாருங்கள்!வானத்தில் தோன்றும் பிரம்மாண்ட அதிசயம்!
இலையுதிர் காலத்தின் முதல் முழு நிலவுக்கு அடுத்ததாக வரும் முழு நிலவு, 'ஹண்டர்ஸ் மூன்' என அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு, உணவைச் சேமித்து வைப்பதற்காக விலங்குகளை வேட்டையாட நிலவொளியைப் பயன்படுத்தியுள்ளனர். அறுவடை முடிந்த வெட்டவெளியில் விலங்குகள் நடமாடுவதை நிலவொளியில் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்ததால், இந்நிலவுக்கு 'ஹண்டர்ஸ் மூன்' என்ற பெயர் உருவானது.
இந்த முழு நிலவு அடிவானத்தில் தோன்றும் போது அடர்ந்த ஆரஞ்சு அல்லது செந்நிறத்தில் காட்சியளிக்கும். வழக்கமாக பவுர்ணமிக்கு அடுத்தடுத்த நாட்களில் நிலவு தோன்றுவதில் தாமதம் ஏற்படும். ஆனால், இந்த வேட்டைக்காரன் நிலவு சூரியன் மறைந்த உடனேயே வானில் உதயமாகி, இரவு முழுவதும் பிரகாசமான வெளிச்சத்தை வழங்கும்.நிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுடன் இந்த பவுர்ணமி இணைவதால், இது வழக்கமான நிலவை விட பெரியதாகவும், அதிக ஒளி வீசியும் தென்படும்.
மாலையில் சூரியன் மறைந்த சிறிது நேரத்தில், பிரம்மாண்டமான ஆரஞ்சு நிற நிலவை வெறும் கண்ணாலேயே ரசிக்கலாம். தொலைநோக்கி தேவை இல்லை.

