லாக்-அப், என்கவுன்டர் மரணம் : இழப்பீட்டு தொகை ரூ.7.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு..

 
tn assembly

தமிழ்நாட்டில்  காவல் நிலையத்தில் உயிரிழப்பவர்கள், என்கவுண்டர் பலி உள்ளிட்ட காவல் மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காவல் நிலைய மரணங்கள் நடந்து வருகிறது.  இது மனித உரிமைகள் ஆணையரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் நடத்தப்படும் விசாரணையின் விளைவாக நிகழும் மரணம் மட்டுமின்றி, ஒரு குற்றவாளியை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல், வேறு ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதன் விளைவாக ஏற்படும்  மரணமும் காவல் மரணத்தின் கீழே வரும்.   சந்தேகக் குற்றவாளியை அடித்து, துன்புறுத்துவதன் மூலம் குற்றம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை புலனாய்வில் ஈடுபடும் காவல்துறையினரிடையே இருந்து வருகிறது.  

காவல்துறை தாக்குதல்

அதன்பேரில், சந்தேக குற்றவாளியை விசாரணையின்போது கண்மூடித்தனமாக அடிப்பதால், காவல் மரணங்கள் நிகழ்கின்றது.  காவல் நிலையம் அழைத்து வரப்படும் சந்தேக குற்றவாளி, விசாரணையின் முடிவை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், காவல் நிலைய வளாகத்திலேயே துக்கிட்டோ,  நச்சு திரவத்தைக் குடித்தோ தற்கொலை செய்து  கொண்டால், அதுவும் காவல் மரணம் ஆகும். குற்ற விசாரணை நடைமுறை சட்டமோ, புலன் விசாரணை செய்வது குறித்த வழிமுறைகளோ தெரியாத சிலர் புலன் விசாரணைக் குழுவில் இடம் பெற்று விடுவதாகவும்,  விசாரணையின்போது அவர்களுடைய வரம்பு மீறிய செயல் சில நேரங்களில் காவல் மரணத்தை ஏற்படுத்திவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

லாக்கப் மரணம்

இந்நிலையில்   தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தி  தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.  மேலும்,  துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கான இழப்பீட்டு தொகையும் ,  பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.  அதேபோல், காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்படுவர்களுக்கான இழப்பீட்டு தொகையும் ரூ.7.5 லட்சமாகவும், காவலர்களால் உடல் துன்புறத்தலுக்கு ஆளானது உறுதியானால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகை  ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ஆக வழங்கப்படும்  என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.  தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..