திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் பங்குனி உத்திர திருவிழா உற்சவம், சாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.