நீலகிரிக்கு மே 15ல் உள்ளூர் விடுமுறை
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 15-ந்தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

உதகையின் தற்போது கோடை சீசன் கலைக்கட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக காய்கறி கண்காட்சியும், இரண்டாவது நிகழ்ச்சியாக வாசனை திரவிய கண்காட்சியும, மூன்றாவது நிகழ்ச்சியான ரோஜா கண்காட்சியும் நடைபெற்று முடிந்த நிலையில் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி மே 15 ஆம் தேதி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.
27வது ஆண்டாக நடைபெறும் இந்த மலர்கள் காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பத்து நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மலர் கண்காட்சி தொடங்கும் நாளான வியாழன் அன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். மேலும் அதற்கு பதிலாக மே 31ஆம் தேதி பணி நாளாக அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


