சாம்பாரில் பல்லி.. ஆஸ்பத்திரியில் குழந்தைகள்! – "ஜாலியா இருக்கோம்" எனப் பதிவிட்ட திமுக பெண் நிர்வாகி; நெட்டிசன்களின் கடும் கண்டனம்!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 2 தினங்களுக்கு முன் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வழக்கம்போல மதிய உணவு சாப்பிட்டனர். இதனை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.சில மாணவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் வந்து மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து முதலுதவி அளித்தனர்.
இதனையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள், 13 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் மாணவ, மாணவியர்கள் உடல்நலக்குறைவுக்கு காரணமாக மதிய உணவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் சாம்பாரில் பல்லி விழுந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக உணவை சமைத்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் நடுநிலைப்பள்ளியின் சமையலர் மனோகரி , உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டார்.
இந்த நிலையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகி வைஷ்ணவி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உடல் நல பாதிப்படைந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் நேரில் சென்று நலம் விசாரித்தேன். குழந்தைகள் அனைவரும் "ஊசி மட்டும்தான் பயமா இருக்கு அக்கா மத்தபடி நாங்க ஜாலியாதாங்ககா இருக்கோம்" என்று சந்தோஷமாக உரையாடினார்கள். அனைவரும் நலமுடன் வீடுதிரும்ப தயாராக உள்ளனர்!” என தெரிவித்திருந்தார்.
இதனைக் கண்ட இணையவாசிகள் வைஷ்ணவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜாலியா தாங்ககா இருக்கோம் என சொன்னார்கள் என பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

