பெரும் அதிர்ச்சி! அரசு பள்ளியில் வழங்கப்பட்ட சேமியாவில் கிடந்த பல்லி- மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி
சிதம்பரம் அருகே புவனகிரி அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 17 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இன்று காலை மாணவர்களுக்கு சேமியா கிச்சடி உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு மாணவரின் தட்டில் பல்லி கிடந்தது. இதைப்பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் மற்ற மாணவர்கள் உணவை சாப்பிடவில்லை.
உணவில் பல்லி விழுந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். அப்போது பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களை ஏன் சிகிச்சைக்கு அனுப்பவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். உணவில் பல்லி விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

