இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் லிவிங் டூ கெதர்- ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீருடன் புகார்

 
d

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 6 மாதம் கல்யாணம் செய்யாமல், குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெருங்குளத்தை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாள்தோறும் பெருங்களத்தூருக்கு சென்று வர சிரமமாக இருக்கும் என்பதால்  தோழிகளுடன் சேர்ந்து சென்னையில் தங்கி  வேலை பார்த்து  வந்துள்ளார். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதூர் பகுதியை சேர்ந்த மருதப்புலி மகன் ராஜ்குமார், சென்னையில் தங்கி  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ராஜ்குமாருக்கும், அகிலாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. 

இந்நிலையில் இருவரது வீட்டிற்கும் தெரியாமல் சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து அகிலாவும், ராஜ்குமாரும் கடந்த 6 மாத காலமாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜ்குமாரின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் இருந்துள்ளது. அகிலாவுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது போல் பல போலி ஐடிகளை  உருவாக்கி இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் ராஜ்குமார் பேசி வந்தது அகிலாவுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அகிலா ராஜகுமாரிடம் கேட்டபோது இருவருக்கிடையே பிரச்சனை உருவாகி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக ராஜ்குமார் அகிலாவை அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னையிலேயே அகிலாவை விட்டு தனது சொந்த ஊரான நத்தம் புதூருக்கு ராஜ்குமார் கிளம்பி சென்றுள்ளார். 

இதனையடுத்து அகிலா ராஜ்குமாரை தேடி கடந்த 9-ம் தேதி திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார். பின்னர் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  பின்னர் திண்டுக்கல் திரும்பி வந்த பொழுது ராஜ்குமாரின் தந்தை சில நபர்களுடன் சேர்ந்து அகிலாவ் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 181 என்ற சமூக நலத்துறை எண்ணிற்கு அகிலா போன் செய்துள்ளார். சம்பவ இடத்துக்கு காவல்துறையின் உடன் வருகை தந்த சமூக நலத்துறை அதிகாரிகள்   அகிலாவை மீட்டு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதில் அகிலவை திருமணம் செய்து கொள்ள முடியாது என ராஜ்குமார் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அகிலா தன்னை நம்ப வைத்து மோசடி செய்து தனது வாழ்க்கையை ராஜ்குமார் கெடுத்து விட்டதாக கூறி  திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீபிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அகிலா இன்று மாலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் பிரிவு மையத்தில் இருந்து சாணார்பட்டியை சேர்ந்த பெண் காவலர் உதவியுடன் அகிலா சென்னைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அகிலா கூறுகையில், ராஜ்குமாரிடம் என்னைப்போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று சம்பவம் வேறு பெண்களுக்கு நடைபெறக் கூடாது. ராஜ்குமார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.