மதுப்பிரியர்கள் ஷாக்..! டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான ஒயின் விற்பனை..!

 
1

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு டாஸ்மாக் கடையில், 2021-ல் காலாவதியான பழைய ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டிலிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் சோதித்துப் பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் விரைந்து வந்த சிறுவலூர் போலீசார், கடையில் இருந்த 13 காலாவதியான பாட்டில்களைப் பறிமுதல் செய்து மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு (2021-ஆம் ஆண்டிலேயே) காலாவதியான ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய ஒயின் பாட்டிலில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அதன் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியைச் சோதித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக அவர் கடையின் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

விற்பனை செய்யப்பட்ட ஒயின் பாட்டில்கள் கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே தங்களின் காலாவதி காலத்தை எட்டியவை ஆகும். "இவற்றைக் குடித்துவிட்டு உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?" என்று அப்பகுதி பொதுமக்களும் மதுப்பிரியர்களும் அச்சமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கோவை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் 2021-ல் தயாரிக்கப்பட்ட பழைய மதுபானங்கள் பொங்கல் பண்டிகை விற்பனையின் போது கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன