தீபம் ஏற்றலைன்னா 6 மாசம் ஜெயில் தான்- மதுரை கலெக்டருக்கு காத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு அபாயம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடும் சட்ட நெருக்கடி ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெறும் அறிவுரை அல்ல, கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய நீதிமன்ற உத்தரவு என்பதால், அதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியரையே சாரும். உத்தரவை நிறைவேற்றாமல் காலம் கடத்தினாலோ, வேறு காரணங்களைக் காட்டி தவிர்த்தாலோ, அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று சட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நீதிமன்றங்களின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க Contempt of Courts Act, 1971 எனப்படும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ், நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம். உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால், அதனை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எந்த அதிகாரியும் தனிப்பட்ட காரணத்தை சொல்ல முடியாது என்றும், உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளை நீதிமன்றத்திடமே முறையிட்டு தீர்வு காண வேண்டுமே தவிர, தானாக முடிவெடுத்து நிறுத்த முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் ஏற்கனவே தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தீபம் ஏற்றப்படுமா, இல்லையா என்பது குறித்து பக்தர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒருவேளை உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால், அது சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

