maxi cab வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை 4 தவணைகளாக செலுத்தலாம்- போக்குவரத்துத்துறை

 
maxi cab

maxi cab வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ஒரே தவணையாக இல்லாமல் 4 தவணைகளாக செலுத்தலாம் என வாடகை வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Mahindra Tourister Maxi cab | chrispit1955 | Flickr

7 இருக்கைகளுக்கு மேல் உள்ள  Maxi cab வாகனங்கள் காலாண்டு வரிக்கு பதிலாக, ஆயுட்கால வரியை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயுட்கால வரியை 2026 ம் ஆண்டு நவம்பர்  மாதம் வரை 4 தவணையாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். 

அதன்படி maxi cab வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை வாகன உரிமையாளர்கள் 30.11.23-ல் முதல் தவணையாகவும் , 30.11.24-ல் இரண்டாவது தவணையாகவும் , 30.11.25-ல் மூன்றாவது தவணையாகவும் , 30.11.26-ல் நான்காவது தவணையாகவும் 4 ஆண்டுகால இடைவெளியில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாடகைக்கு பயன்படுத்தப்படும்  கார்கள், டெம்போ டிராவலர்கள், 12+1 இருக்கைகள் கொண்ட வேன்கள் உள்ளிட்டவை maxi cab வாகனங்களாகும். இந்த வாகனங்களுக்கான வரி காலாண்டு வரியாக செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனிவரும் நாட்களில் ஆயுட்கால வரியாக செலுத்த வேண்டும் என போக்குவரத்துதுறை சார்பில் அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி ஒரு வாகனத்தின் மொத்த விலையில் குறைந்தபட்சம் 9 சதவீதம் ஆயுட்கால வரியாக செலுத்தப்பட வேண்டும்.