காதலிக்க மறுத்ததால் டீசல் ஊற்றி எரித்த கொடூரனுக்கு ஆயுள்

காதலிக்க மறுத்ததால் இளம் பெண்ணை டீசல் ஊற்றி எரித்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அடுத்த அழிக்கால். இப்பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர். இவரின் 16 வயது மகளை முட்டம் பகுதியினைச் சேர்ந்த எவரெஸ்ட் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண் எவரெஸ்ட் காதலை கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த எவரெஸ்ட் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து காதலிக்கப் போகிறாயா இல்லை என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
அப்போதும் அந்த இளம் பெண் காதலிக்க முடியாது என்று மறுக்கவே, ஆத்திரமடைந்த வாலிபர் எவரெஸ்ட் , அந்த இளம் பெண் மீது டீசல் ஊற்றி தீ வைத்திருக்கிறார் . இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசில் எவரெஸ்ட்டை காதலிக்காததால் தன்மீது டீசல் ஊற்றி எரித்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் பின்னர் வெள்ளிச்சந்தை போலீசார், எவரெஸ்ட் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டில் மே மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இன்று நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மாணவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர் எவரெஸ்ட்டுக்கு ஆயுள் தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஜோசப் ஜாய்.