இந்தி சர்ச்சை...எல்.ஐ.சி. இணையதளம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்
இந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதளம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் வாடிக்கையாளர்களும் இந்தி தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.
எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.