வாங்க தெரிஞ்சிக்கலாம்..! தமிழ்நாட்டில் பனை மரம் வெட்ட அனுமதி பெறுவது எப்படி?
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,
பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம், தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் கலெக்டர் அனுமதி பெறுவது கட்டாயம்
பனை மரங்களை வெட்ட 'உழவர் செயலி'யில் விண்ணப்பிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அனுமதி கடிதம் காட்டாயம், நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனைமரங்களை பாதுகாக்கும் நோக்கில், சட்டசபையில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். மேலும் பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
பனை மரங்களை வெட்டுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கவும், ஒப்புதல் அளிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), ஒருங்கிணைப்பு அலுவலராக இருப்பார். உறுப்பினர்களாக மாவட்ட வன அலுவலர்,கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், காவல் துறை ஆய்வாளர் (வனவிலங்கு குற்றப் பிரிவு) உள்ளிட்டோர் இருப்பார்கள்.
இதேபோல், மாவட்ட அளவிலான குழுவுடன் இணைந்து செயல்பட, ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தலைவராக வட்டார அளவிலான அலுவலர் இருப்பார். தோட்டக்கலை வட்டார அளவிலான அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலர் இருப்பார். கால்நடை பராமரிப்புத்துறை வட்டார அளவிலான அலுவலர், வனவிலங்கு குற்றப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
பனை மரங்களை வெட்டுவதற்கான நடைமுறைகள்
* பனை மரங்களை வெட்ட விரும்பும் நபர், வட்டார அளவிலான குழுவிடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பம் பெறப்பட்டவுடன், வட்டார அளவிலான குழுவினர் நேரடியாக அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்வார்கள்.
* ஆய்வின் போது, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை மற்றும் காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.
* விசாரணையில், மரங்களை வெட்டுவதற்கான அவசியம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
* மாவட்ட அளவில் இருக்கும் குழுவிற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்ட பிறகு, மாவட்ட அளவிலான குழுவினர், விண்ணப்பத்தை மறுஆய்வு செய்வார்கள்.
* அதன் பின், குழுவில் இருக்கும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று, மரங்களின் எண்ணிக்கையை மீண்டும் ஆய்வு செய்து உறுதிப்படுத்துவார்கள்.
* சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே, அனுமதி வழங்கப்படும்.
கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும்
* பனை மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படும்.
* அனுமதியின்றி பனை மரங்களை வெட்டினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* பனை மரங்களை வெட்டுவதற்கான அனுமதி பெற, ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு விண்ணப்பத்தை தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும்.
* அனுமதி கிடைத்த பின், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக பத்து புதிய பனை மரக்கன்று நடப்பட்டு வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.
* பனை மரங்களை வெட்டுவதன் முக்கிய நோக்கம், அதன் அழிவைத் தடுப்பதாகும்.
பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சிறப்பு விழிப்புணர்வு திட்டங்கள்
* பனை மரங்களின் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* பனை மரங்களின் நன்மைகள் குறித்தும், அதன் அழிவின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
* சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களில் பனை மரங்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும்.
* மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பனை மரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்குவார்கள்.


