மின்னல் வேகத்தில் வருவோம்.. பயமே வேண்டாம்! களத்தில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை..!!

 
11

திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பெண் குழுவினர் மாணவிகளிடம் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் "குட் டச் – பேட் டச்" குறித்த முக்கிய விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தனர். மேலும், குழந்தைகள் மற்றும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தொந்தரவுகள் அல்லது ஆபத்துகள் குறித்து 1098 குழந்தைகள் உதவி எண்ணை தொடர்புகொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினர். மேலும் சிங்கப்பெண் போலீசாரை அழைத்தால், மின்னல் வேகத்தில் உதவிக்காக வந்து சேருவோம் என்றும் மாணவிகளுக்கு நம்பிக்கை அளித்தனர்.

அதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் பெண் பிள்ளைகள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், இணையதள குற்றங்கள், சமூக வலைதள பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் சுய பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மாணவிகளுக்கு உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி எந்த சூழ்நிலையிலும் அச்சப்படாமல் தங்களது பிரச்சனைகளை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தனர்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'யினர், பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது ஈவ்-டீசிங் (Eve-teasing) போன்ற தொல்லைகளோ ஏற்பட்டால், உடனடியாகத் தங்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், இத்திட்டத்திற்காக பிரத்தியேக சைரன் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களுக்கு இந்தச் சிங்கப்பெண் ரோந்துப் பணி பெரும் மன தைரியத்தையும், பாதுகாப்பையும் தரும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் பெண் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிங்கப்பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவிகளிடையே தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.