பிரபல கிரிக்கெட் பிரபலம் திடீர் ஒய்வு அறிவிப்பு..!!
Jan 2, 2026, 10:27 IST1767329872186
ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;
”கடந்த சில காலமாவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இதுபற்றிப் பேசினேன். 2027-ல் நடைபெறும் இந்தியச் சுற்றுப்பயணம் வரை நான் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், இதுவே விடைபெற சரியான தருணம் என்று நான் உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சிட்னி மைதானத்தில், அதுவும் எனது சொந்த முடிவின்படி விடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
39 வயதான உஸ்மான் கவாஜா இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.39 என்ற சராசரியுடன் மொத்தம் 6,206 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 232 ஆகும். டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 40 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். கவாஜா, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் இஸ்லாமியர் என்ற சிறப்பை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


