வருமானத்தை மறைத்த எம்.பி. நவாஸ்கனி மீது சட்டப்படி நடவடிக்கை?

 
நவாஸ்கனி

வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில்,  ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி நவாஸ்கனி, கடந்த 2019 ம் ஆண்டும், 2024 ம் ஆண்டும் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது,  அவர் வருமானத்தை மறைத்து உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என, திருநெல்வேலி பாஜகவைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு, தலைமை நீதிபதி எம். எம். ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவசியமில்லை. தங்கள் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, நவாஸ்கனி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பது, வருமான வரித் துறை நடவடிக்கைக்கு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல, வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளது குறித்து வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட கோரி வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கும்  விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில், சொத்து விவரம் குறித்து நடத்திய ஆய்வில், நவாஸ்கனி சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்கியுள்ளதால் 2024 ஆம் ஆண்டு வேட்புமனுவில் கூடுதல் சொத்துமதிப்பை காட்டியுள்ளார். மனுதாரர் குறிப்பிடுவது போல் அதிகமாக சொத்து மதிப்பு இல்லை. 2.85 சதவீதம் மட்டுமே அதிகம். அதனால் புகாரில் முகாந்திரம் இல்லை என விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு, இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.