உடனே கிளம்புங்க..! களைகட்டும் பெசன்ட் நகர் உணவுத் திருவிழா.. 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் ஒரே இடத்தில்...
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் 'மதி உணவுத் திருவிழா' சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே நேற்று தொடங்கியது.
வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில், 38 மாவட்டங்களை சேர்ந்த பாரம்பரிய சுவை மிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் பரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சிவகங்கை நெய் சாதம், தென்காசி உளுந்தங்களி, தருமபுரி ராகி அதிரசம், சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் யாழ் உணவுகள் உள்ளிட்ட 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன. இதற்காக 50 பிரத்யேக உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர அடுப்பில்லா முறையில் தயாரித்த உணவுகள், பனை பொருட்கள், 90-களின் நினைவுகளை தூண்டும் தின்பண்ட வகைகள், செட்டிநாடு பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ஏதுவாக 12 சிறப்பு அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரையும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதில், உணவு விற்பனை மட்டுமின்றி, மாலை நேரங்களில் பொதுமக்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள், மகளிர் குழுவினருக்கு விற்பனை நுணுக்கங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.


