அரசு பேருந்து நடத்துனரை விரட்டிவிரட்டி தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி கைது
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேருந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார், நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேருந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். அங்கு அதிமுக கொடி கட்டிய தார் ஜீப்கார் ஒன்று இடையூராக நின்றுள்ளது. அதனால் ஆரன் அடித்த அசோக்குமார் கார் நகராமல் இருந்துள்ளது.
காரின் வலதுபுறத்தில் பேருந்தை அணைத்தவாரு ஓட்டி சென்றபோது காரின் மீது உரசியது. இதனால் காரில் இருந்த பெண் உள்ளிட்ட நான்கு பேரும் இறங்கி ஓட்டுனர் அசோக்குமார், நடத்துனர் இருசப்பன் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். அப்போது நடத்துனர் செல்போனில் படம் பிடிக்க அப்பெண் செல்போனை பறித்துள்ளார். இதனால் தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுனரும் நடத்துனரும் பதிலுக்கு தாக்கியுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, மற்ற 7 மாநகர பேருந்தில் இருந்த போக்குவரத்து ஊழியர்களும் பேருந்தை நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். அதே வேளையில் அங்கு பதட்டம் ஏற்பட்டதால் அதிமுக கொடியுடன் வழக்கறிஞர் உடையில் இருந்த பெண் உள்ளிட்ட நான்கு பேரும் தப்பினார்கள். தகவல் அறிந்த தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் நெல்சன், குரோம்பேட்டை ஆய்வாளர் ராஜசேகரன் உள்ளிட்ட காவல் துறையினர் போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மருத்துவமனைக்கு சென்றபின்னர் புகார் கொடுக்க சென்னதன் பேரில் கலைந்தனர். இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரித்தபோது அதே குரோம்பேட்டையை சேர்ந்த பிரதிபா ஷாலினி(25) பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் படிக்கிறார், இவரின் கணவர் ரஞ்சித்(26), திபன், அஸ்வந்த் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.