பொங்கல் விளையாட்டு விழாவில் நடந்த சோகம்... நீச்சல் போட்டியில் பங்கேற்ற கூலித்தொழிலாளி உயிரிழப்பு

 
நீச்சல் நீச்சல்

பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டு விழாவின் நீச்சல் போட்டியில் பங்கேற்ற கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த பெரிய தெற்குகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40) கூலித் தொழிலாளி. இவருக்கு  மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ஆனைக்காடுரோடு பகுதியில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் மணிகண்டன் நீச்சல்  போட்டியில் கலந்து கொண்டு பிள்ளையார் கோயில் அருகிலிருந்த குளத்தில் சக போட்டியாளர்களுடன் நீந்திச் சென்றார். அப்போது  மறுமுனையில் உள்ள கரையை தொட்டு மீண்டும் திரும்ப முயற்சித்தபோது மணிகண்டன் திடீரென சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனால் மற்ற வீரர்கள் கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் தொடக்க இடத்திற்கு நீந்தி வந்த நிலையில்   மணிகண்டனை மட்டும் நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சக இளைஞர்கள் மணிகண்டனை தேடினர். உடனே இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தின் சேற்றில் சிக்கியியிருந்த மணிகண்டனின் உடலை சடலமாக மீட்டனர். தனது தந்தை நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது தந்தையை அப்பா, அப்பா   என்று உற்சாகப்படுத்திய மணிகண்டனின் குழந்தைகள் பின்னர் மணிகண்டன் நீரில் மூழ்கி இறந்ததையறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிகண்டனின் குடும்பத்திற்கு எதிர்காலத்திற்கு தேவையானவற்றை செய்ய அரசு முன் வரவேண்டும் என மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.