”செங்கோல் விவகாரம்- போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் தொடர்பில்லை”

 
எல் முருகன்

செங்கோலை, பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சபாநாயகர்  அவர்களிடம், சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

L.Murugan

இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “செங்கோலை, பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சபாநாயகர்  அவர்களிடம், சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய  நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். திருவள்ளுவருக்கு சிலை வைத்தோம், மாநாடு வைத்து தமிழ் வளர்த்தினோம் என்று நொடிக்கு நொடி கூறிக் கொள்கிற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்து விட்டார்கள்.


இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். நமது தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்தி கூட்டணி தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.