தினமலர் நாளிதழ் மீது வழக்குப்பதிவு- திமுக அரசுக்கு எல்.முருகன் கண்டனம்
தமிழகத்தில் ஊடகங்கள் அனைத்தும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கும் திமுக அரசு, உண்மை செய்தியை வெளியிட்டதால் வழக்குப்பதிவு செய்வது அராஜக செயல் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அயோத்தியில் ராம்ஜென்மபூமியில் 500 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கோயில் அமைத்திருப்பதை பார்த்து நாடுமுழுவதும் மக்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதுமே மக்கள் ராம பக்தியில் மூழ்கினர். ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத போலி திராவிட மாடல் அரசு பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றபோது தமிழகத்தில் கோயில்களிலும் மற்ற இடங்களிலும் மக்கள் வழிபாடு நடத்தவும், அந்த காட்சியை காணவும் தடை விதித்தது.
இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்தது. தமிழகத்தில் கோயில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுத்த பல செய்திகள் ஊடகங்கள் மற்றுமின்றி சமூக ஊடகங்களிலும் ஆதாரங்களுடன் வெளி வந்தன.
இது தொடர்பாக தினமலர் நாளிதழும் செய்தி வெளியிட்டது. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக அரசு ஏற்கெனவே மிரட்டி இருந்தது. இந்தநிலையில் தினமலர் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்திகளை மக்களுக்குக் கொண்டு சென்றதற்காக தினமலர் நாளிதழ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது மிகவும் தவறான செயல். மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் கடமையாகும்.
தமிழகத்தில் ஊடகங்கள் அனைத்தும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கும் திமுக அரசு, உண்மை செய்தியை வெளியிட்டதால் வழக்குப்பதிவு செய்வது அராஜக செயல். பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இந்த அராஜகங்களுக்கு வரும் மக்களவைத் தேர்தல் மூலம் மக்கள் தக்கபதிலடி கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.