மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்ற எல்.முருகன் !

 
1

எல்.முருகனின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்று (ஏப்ரல் 2) நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக் காலம் இன்றுடன்(ஏப்ரல் 3) முடிவடைகிறது.

இதில், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தர்மஷிலா குப்தா, மனோஜ் குமார் ஜா, சஞ்சய் யாதவ், கோவிந்த்பாய் லால்ஜிபாய் தோலாக்கியா, சுபாஷ் சந்தர், ஹர்ஷ் மகாஜன், ஜி.சி. சந்திரசேகர், எல்.முருகன், அசோக் சிங், சந்திரகாந்த் ஹண்டோர், மேதா விஷ்ரம் குல்கர்னி மற்றும் சாதனா சிங் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கால்நடை பாரமரிப்பு-மீன் வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரின் பதவிக் காலம் நேற்று நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.