கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?- எல்.முருகன்

 
L.Murugan

நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு சமீபத்தில்  ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியபிறகு மேடையில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை ஒருமையில் பேசி விமர்சித்திருக்கிறார். அப்போது பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி ஒரு பாசிஸ்ட், சர்வாதிகாரி, அவர் தேரில்தான் நிற்பார், விமானத்தில் தான் வருவார், மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார், மக்களின் ஸ்பரிசம் தெரியாதவர், மக்களின் வியர்வையை தொடாதவர், மக்களின் பசியை அறியாதவர், அவர் தெய்வமகன் கிடையாது டெஸ்ட் டியூப் பேபி” என பிரதமர் மோடியை இழிவுப்படுத்தி கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். மேலும் பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ் பிரதமர் அவர்களை ‘அவன், இவன்’ என ஒருமையில் பேசியது பாஜகவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பை குவித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ”நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் குறித்து கண்மூடித்தனமாக விமர்சனத்தை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரகாஷ் ராஜ்க்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம். பிரகாஷ் ராஜ் கர்நாடகா நடிகர் அவ்வளவுதான். அவருடைய கருத்துக்களை நாம் இங்கே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா கூட்டணி 100 தொகுதிகளை ஜெயிப்பதே சந்தேகம் தான். தோல்வியின் விளிம்பில் இருந்து அவர்கள் கதறி கொண்டிருக்கிறார்கள்.