திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்க வேண்டும்- எல்.முருகன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இருப்பது கூடுதல் பலம் தான் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசின் போலி முகம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடத்திய நாடகம், பக்தர்கள் மீது நடத்திய தாக்குதல் அனைத்தும் நேற்றைய தினம் வெளிப்பட்டு இருக்கிறது. திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை டிவிஷன் பென்ச் உறுதி செய்து இருக்கிறது. திமுக மத்திய அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்பட்டு இருக்க வேண்டும். இரட்டை நிலைப்பாடு எடுத்து இருக்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என தீர்ப்பு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தனர். ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற உத்திரவிடப்பட்டது. அதையும் நிறைவேற்ற வில்லை. இதை எதிர்த்து பூரணச் சந்திரன் என்ற பக்தர் தீக்குளித்து இறந்தார். ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும்.
இந்நிலையில் டிவிஷன் பெஞ்ச் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்து இருக்கிறார்கள். இது திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை. இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். பக்தர்கள் உரிய வழியில் சென்று தீபம் ஏற்ற அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் திமுகவிற்கு மக்கள் பாடம் பூட்டுவார்கள். தேர்தல் வர இருக்கிறது முருக பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், பெருமாநல்லூரில் இடிக்கப்படும் முருகன் கோவிலை தட்டி கேட்க சென்ற பொழுது அவர் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி இருக்கிறது. தற்பொழுது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என தெரிவித்தார்.
இந்துகளுக்கு அதிகமான உரிமை கொடுத்து இருப்பதே திமுக என முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, பூரண சந்திரன் வீட்டில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் சொன்னால் தான் அவர் சொல்வதை ஏற்க முடியும். வட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் பார்க்க வேண்டும். இதிகாச வரலாற்று சிறப்புமிக்க கோவிலை அயோத்தியில் பாஜக அரசு கட்டியிருக்கிறது. வடமாநிலத்தில் உள்ள கோயில்கள் சர்வதேச தரத்திற்கு இருக்கிறது. இதெல்லாம் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும். திருப்பரங்குன்றத்தில் சாமி கும்பிட்டு விட்டு பூரணசந்திரன் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் ஆறுதல் சொல்ல கூட சொல்ல வில்லை. கூட்டணி குறித்து தேசியத் தலைவர்கள் நேரம் வரும் போது அறிவிப்பார்கள். கரூர் சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 41 பேர் உயிரிழந்த சம்பவம் எல்லாத்துக்கும் தெரியும். ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் குறித்த வழக்கு நீதிமன்றத்தின் நடந்து கொண்டிருக்கிறது.அது குறித்து பேச முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் பாமக ஏற்கனவே இருக்கிறார்கள். 2024 தேர்தலில் இணைந்து தான் தேர்தலில் சந்தித்தோம். அவர்கள் இருப்பது இன்னும் கூடுதல் பலதத்தை கொடுக்கும்" என தெரிவித்தார்.


