மாணவர்களுக்கு உணவு சரியில்லை, சொறி, சிரங்கு... விடுதிகளுக்கு சமூக நீதினு பெயர் மாற்றுனா போதுமா?- எல்.முருகன்
சென்னை கே கே நகரில் உள்ள ESI மருத்துவமனையில் சுமார் 90 பேருக்கு பிரதம மந்திரியின் ஜனா ஆரோக்கிய யோஜ்ஜனா, பிரதம மந்திரியின் திவ்யாஷா கென்திரா திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள், உபகாரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக் கருவிகள் மற்றும் பயன்பாட்டு உபகரங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “முதலமைச்சர் இன்று ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றி உள்ளார். எஸ்சி ஸ் டி மாணவர்கள் விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்துள்ளார். இந்த விடுதிகளை ஒரு நாளாவது முதலமைச்சர் நேரில் சென்று பார்த்துள்ளாரா? அவ்வளவு மோசமான நிலையில் அந்த விடுதிகள் உள்ளது. பெயர் மாற்றினால் போதுமா? மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா சென்று அங்குள்ள விடுதிகளை பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள விடுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மாணவர்களுக்கு சொறி சிரங்கு வந்துள்ளது. உணவு என எதுவும் சுத்தமாக இருக்காது. தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலை. கடந்த வாரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் எல்லாம் செய்தார்கள். சென்னையில் இருக்கும் விடுதிகளுக்கே இந்த நிலை என்றால் கோவை ஆனைகட்டி பகுதியில் இருக்கும் பழங்குடியின மாணவர்களின் விடுதியை நினைத்து பாருங்கள். அந்த விடுதிக்கு நான் சென்றுள்ளேன். அங்கு ஒரு வசதியும் இருக்காது. ஆனால் வார்டன் மட்டும் சுகமாக இருப்பார்.
போலி திராவிட மாடல் ஆட்சியில் விடுதிகளை இந்த நிலையில் வைத்துக்கொண்டு பெயரை மட்டும் மாற்றுகிறார்கள். உண்மையில் மக்கள் மீதும், மாணவர்கள் மீதும் அக்கறை இருந்தால் முதலமைச்சர் நேரடியாக விடுதிகளுக்கு செண்டு பார்க்க வேண்டும். காலனி ஒழுத்துவிட்டோம் என்கிறார்கள். இன்னுமும் தீண்டாமை உள்ளது. இன்னுமும் 2 சுடுகாடு உள்ளது. கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில்தான் சமூக நீதி விடுதி என்று பெயர். வெற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். முதல்வரும் துணை முதல்வரும் விடுதிகளுக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். போலி திராவிட மாடல் சிரிப்பாய் சிரிக்கிறது. அங்கன்வாடி மையங்களையும் மூடி வருகிறார்கள். இதை கைவிட வேண்டும். சிவகாசி பட்டாசு விபத்து வாடிக்கையாகி விட்டது. அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழிமுறைகளை அரசு சொல்ல வேண்டும்” என்றார்.


