மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது- எல்.முருகன்

மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். வளர்ச்சியை நோக்கி இருக்கிற இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை திமுக வஞ்சிக்கிறது. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக்கொள்கை. தமிழ்நாட்டில் ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும்?. நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் போய் ஆங்கிலத்தில் பேசினால், யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். வளர்ச்சியை நோக்கி இருக்கிற இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம்.
தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, பல வல்லுனர்கள் ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளின்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை, மாணவர்களுக்கு தொடக்கக் கல்வியை அவர்களின் தாய்மொழியில் பயிற்றுவிக்க ஊக்கப்படுத்துகிறது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. அது மாணவர்களின் உலகளாவிய அறிவை வளர்க்க உதவும். மூன்றாவது மொழி எந்தவொரு இந்திய மொழியாகவும் இருக்கலாம். மத்திய அரசு எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் கட்டாயப்படுத்தவில்லை. புதிய கல்விக் கொள்கை, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் பிற ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி, வருங்கால சமுதாயத்தின் தூண்களான இளைஞர்களின் வாழ்க்கைக்கு வளமான அடித்தளத்தை அமைக்கும் பணியை செய்கிறது, அதில் அரசியல் கூடாது. பி எம் ஶ்ரீ பள்ளிகளில் உள்ள அடல் புத்தாக்க ஆய்வகங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர உதவும், இதற்கு சிக்கல் ஏற்படுவதால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய ரூ. 5000 கோடி நிதி தடைப்பட்டுள்ளது” என்றார்.