எனக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசையில்லை- எல்.முருகன்

எனக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசையில்லை. பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார். ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-ம் முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று புதுச்சேரியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “தமிழக அரசு கவர்னர் அனுப்பிய கோப்புகளை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. திருப்பி அனுப்புவது குறைகளை கேட்டு அனுப்புவதற்காகத்தான். விளக்கத்திற்கான பதிலை குறிப்பிட்டால் கவர்னர் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்க போகிறார். மணிப்பூர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பழங்குடியினர் விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். போதிய இருக்கை வரவழைக்கும் முன்பாக அவர்கள் கீழே அமர்ந்துவிட்டனர். இதை தேவையின்றி சர்ச்சைக்குரியதாக்குகின்றனர்.
புதுவையிலும் ரேஷன் அரிசி திட்ட நிதி நேரடியாக வங்கியில் செலுத்தப்படுகிறது. எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையில்லை. பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார். ஹாட்ரிக் வெற்றி பெற்று 3ம் முறையாக பிரதமர் பதவியேற்பார். 5 மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறும். புதுவையில் பாஜக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தேவையான அடிப்படை பணிகளை நடத்தி வருகிறோம். பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துச்சென்று அதை நிறைவேற்றுவோம். சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசிடம் தெரிவிப்போம்” என்றார்.