பெண்களின் பங்களிப்பு இல்லாத எந்த நாடும் முன்னேற முடியாது- குஷ்பு

 
குஷ்பு

பெண்களின் பங்களிப்பு இல்லாத எந்த நாடும் முன்னேற முடியாது என தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

Image

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் சென்னை  ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரியுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் & பாலின சமத்துவம் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கு மற்றும் “தமிழ்நாட்டின்  சாதனைப் பெண்கள்” எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சியையும் குஷ்பு சுந்தர் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் கல்லூரி மாணவர்களிடையே  பேசிய குஷ்பு சுந்தர், “பெண்களுக்கு நம்பிக்கையளித்து ஆதரவளிக்க ஆண்கள் முன்வரவேண்டும். சாதி, மதம் முக்கியம் அல்ல என்றும் கடின உழைப்பின் மூலமே  பெண்கள் உயரிய நிலைக்கு வரலாம். பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக முத்ரா திட்டம், உஜ்வாலா போன்றவைகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன.  பெண்கள் பொருளாதாரத்தில்  மேம்பாடு அடைய வேண்டும். பல்வேறு சவால்களையும், தடைகளையும் தாண்டி நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டின் உயரிய நிலைக்கு வந்துள்ளார். 

Image

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வசதிகளும் எளிதாக கிடைப்பெறுகின்றது. ஆனால் அன்றைய காலகட்டத்தில், எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி பெண்கள் செய்த தியாகத்தின் பலனை இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். சூழ்நிலைகள் மாறிவிட்ட இந்த காலத்தில் பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி சிறப்பாக செயலாற்றி, பெருமிதம் கொள்ள வேண்டும். மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் ஏற்பட வேண்டும். அப்போது தான் சமூக மாற்றம் ஏற்படும்.

பெண்கள் ஒவ்வொரு நொடியும் போற்றப்பட வேண்டியவர்கள். பெண்கள் கேலி செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்களை மதிக்க ஆண்கள் தங்களது வீடுகளில் இருந்து கற்க வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும். பெண்கள் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், என்றும் பெண்கள் சாதிக்கப்பிறந்தவர்கள்” என்றார்.