"நல்லா கனவு காணட்டும், ஆனால் ஒரு காலத்திலும் ராகுல் பிரதமராக முடியாது” - குஷ்பு
ராகுல்காந்தி ஒரு காலத்திலும் பிரதமர் ஆக முடியாது என்று பாஜக துணைத்தலைவர் குஷ்பு கூறியுள்ளார்.
தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பூ புதுவையில் தொண்டமாநத்தம் முதல் பத்துககண்ணு சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ரங்கசாமி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. புதுவையில் முன்னேற்றமான ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரெஸ்டோபார்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மிகப்பெரிய நடவடிக்கை. இதுகுறித்து பல மாநிலங்களுடன் பேச வேண்டியுள்ளது. தேவையான விஷயத்தை பாஜ காலத்தோடு செய்யும்.
மல்லிகார்ஜூன கார்கே தனது நாற்காலியை காப்பாற்றி கொள்ள ராகுல் பிரதமர், ஜனாதிபதியாக ஆவார் என சொல்வார். ராகுல் பிரதமராவது கனவு. அவர்கள் கனவு காண்பதற்கு உரிமை உண்டு. ஆனால் அவரால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது. புதுவை மதுவை மட்டும் நம்பி இல்லை. புதுவை சுற்றுலா நகரம். இங்கு அளவோடு மது உள்ளது. விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள், அவரைப்பற்றி பேச வேண்டாம். அவர் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுவை பிரச்சாரத்தின்போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை கூறியுள்ளார்” என்றார்.

