"பிளாக் டிக்கெட் போல விற்கப்பட்ட குடமுழுக்கு டிக்கெட்டுகள்!" – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!
மதுரையில் வைகை சிற்பி - விருதுகள் வழங்கும் விழாவில் வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை பேசியதாவது, "முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு அப்படி சென்றார், இப்படி சென்றார் என்றெல்லாம் சொல்கின்றனர். அதனைப் பற்றி பேசவே விரும்பவில்லை. ஏனெனில், அவர் லண்டனுக்கே போக வேண்டாம் என கூற விரும்புகிறேன்.
காரணம், பிரிட்டனின் வளர்ச்சியே வெறும் ஒரு சதவிகிதம்தான். அவர்களை முதலீடு செய்யச் சொன்னால், அவர்கள் எங்கு செல்வார்கள். அவர்கள் ஊரில் முதலீடு செய்வதற்கே அவர்களிடம் பணமில்லை. இந்தியாவிலிருந்து டாடா, ஜாகுவார், மகிந்திரா ஆகியோர்தான் பிரிட்டனில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.
முதல்வர் இங்கிருந்து லண்டனுக்கு செல்வதைவிட, இங்கேயே இருக்கும் கோவை மற்றும் மதுரைக்கு வர வேண்டும். அவர் லண்டன் சென்றாலும், இங்குள்ள துணை நிறுவனங்கள்தான் பணம் கொடுக்கும். இதை வைத்தே எதிர்க்கட்சிகளும் அறிக்கைப் போரும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கை த.வெ.க அரசு எப்படி நடத்தினர்? குடமுழுக்குக்கான டிக்கெட்டை சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பதைப் போல விற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கு வி.ஐ.பி-க்களும், வி.வி.ஐ.பி-க்கள் மட்டுமே இருந்தனர். மதுரை மக்கள் எங்கே இருந்தனர்? 4 பேருக்கு மட்டுமே தீர்த்தம் தெளித்தனர். மற்றவர்களுக்கெல்லாம் தண்ணீரைத்தான் தெளித்தனர்.
தண்ணீரைக் காவல்துறையிடம் கொடுத்து தெளிக்கச் சொல்கின்றனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக இருக்கின்றனரா? அல்லது தண்ணீர்த் தெளிப்பதற்காக இருக்கின்றனரா? இதைப்போல் செய்தீர்கள் என்றால், கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையே குறையத் தொடங்கும்" என்றார்.

