நீங்காத வடுவான கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இன்று 22ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..!

 
1

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது.பள்ளி முன்பு, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பயின்ற 18 குழந்தைகள் படுகாயமுற்றார்கள். 94 சின்னஞ்சிறு குழந்தைகள் தீக்கு இரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனையொட்டி சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு பிரியமான பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 22 ஆண்டுகள் உருண்டோடினாலும், இதன் சோகமும், வடுவும் இன்னும் மாறவில்லை என பெற்றோர்களின் கண்களில் தெரிகிறது.

சம்பவம் நடைபெற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களின் முகத்தில் அந்தச் சோகம் கொஞ்சம்கூட அகலவில்லை. பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், காலையில் மொட்டுபோல பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியபோது அவர்கள் கருகி திரும்பி வருவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. 22 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அன்றைய வேதனையின் வடு உள்ளத்திலேயே உள்ளது. அன்றைய தினம் கும்பகோணம் முழுவதும் அழுகை சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இளம் பிஞ்சுகளை விழுங்க, அந்தத் தீக்கு எப்படித்தான் மனசு வந்தது என்று இன்று வரை நாங்கள் நினைத்து நினைத்து அழாத நாளே இல்லை. இன்றைக்கும் நாங்க நடைபிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.