94 குழந்தைகள் காவு வாங்கிய கும்பகோணம் பள்ளி கட்டிடத்தை அரசு கையகப்படுத்த கோரிக்கை..!

தீ விபத்தில் குழந்தையை பறிகொடுத்த ஒருவரான மகேஷ் உள்ளிட்டோர் கும்பகோணம் மாநகராட்சி மேயர், ஆணையர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் நேற்று அளித்த கோரிக்கை மனு: கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள பள்ளியில் 2004, ஜூலை 16-ம் தேதி நேரிட்ட தீ விபத்தில் குழந்தைகள் 94 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, குழந்தைகளை தீ விபத்தில் பறிகொடுத்த பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர், அப்பள்ளி முன்பு கடந்த 21 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நடத்தி வருகிறோம். இந்நிலையில், தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட பள்ளி நிர்வாகத்தினர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது. மாறாக, அக்கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.