குவியும் பாராட்டுக்கள்..! கிளிமஞ்சாரோ மலையில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி ஏற்றி உலகசாதனை..!
தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் உள்ள உஹுரு சிகரத்தில், 16 இந்தியப் பங்கேற்பாளர்கள் கொண்ட குழுவினால் 80 அடி × 120 அடி (9,600 சதுர அடி) அளவிலான மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை வெற்றிகரமாகப் படைக்கப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக உயரமான (5896 மீட்டர்) சிகரமான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ (உஹுரு சிகரம்) மலையில், 9 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ்செல்வி 37, தலைமையில் வெற்றிகரமாக ஏற்றி, இனிகோ உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
உலகின் 7 கண்டங்களின் உயர்ந்த சிகரங்களை ஏறி சாதனை படைத்த முத்தமிழ்செல்வி தலைமையில் ஜூலை 8ல் ஒரே கொடி, ஒரே இலக்கு, போதை இல்லா இந்தியா என்ற தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், 80க்கு 120 அடி அளவுள்ள பிரமாண்ட தேசியக் கொடியை கிளிமஞ்சாரோவில் ஏற்றி இனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மலைபேற்ற குழுவினர்கள் முத்தமிழ்செல்வி 37, தலைமையில், ஒருங்கிணைப்பாளர் கீதா 60, சான்விகா 6, அமிழ்தன் 8, ட்ரேயா ஷிதிஜ் காலே 9, ஆரவ் யரடபள்ளி 13, சஞ்சய் சிம்ஹா 17, சனத் சிம்ஹா 18, தனிஷ்கா 21, தர்ஷன் 27, சர்வாணி பைரெட்டி 41, மோகன்ராஜ் 42, நிரஞ்சனா 45, கல்பனா 47, டாக்டர் திருச்செந்துாரன் 55, உமா 59, பங்கேற்றனர்.
முத்தமிழ்செல்வி கூறியதாவது: நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த பயணம் அமைந் திருந்தது. இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், போதை இல்லா இந்தியா என்ற உயரிய சமூக நோக்கத்திற்கான விழிப்புணர்வையும் இந்த உலகச் சாதனை ஏற்படுத்தியது என்றார்.

