குவியும் பாராட்டுக்கள்..! ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலாக காப்பாற்றிய காவலர்..!

 
1

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாமே தேவி. இவருக்கு வயது 50. இவர் நேற்று காலை ஜார்க்கண்ட் செல்ல காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அதற்காக கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற திட்டமிட்டுள்ளனர். காலை 11.53 மணிக்கு காட்பாடியில் இருந்து அந்த ரயில் புறப்பட்ட போது, கடைசி நிமிடத்தில் ஏற முயன்றதால் அவரால் ஏற முடியாமல் அப்படியே கீழே விழ இருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படைவீரர் ஆதித்யா குமார், விரைந்து சென்று அந்த பெண்ணை ரயிலின் சக்கரத்துக்குள் விழாமல் தடுத்து, அங்கிருந்த பயணிகளின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார்.

ஆனால் அந்த வேகத்தில் ஆதித்யா குமார் திடீரென தண்டவாளம் மற்றும் நடைமேடை சுவர் இடையே சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்த ஒரு பயணி அவரது கால்களை பிடித்து தடுக்க, மற்றொருவர் ரயிலின் அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இந்த திடுக்கிடும் சம்பவத்தில் ஆதித்யா குமாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. ஆனால் சாமே தேவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சாமே தேவி மற்றும் அவரது உறவினர்கள் ஆதித்யா குமாருக்கு நன்றி தெரிவித்தனர். ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் பொதுமக்களும் அவரை பாராட்டியதுடன், ‘உண்மையான ஹீரோ’ என புகழாரம் சூட்டினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோ மக்களின் மனதை உலுக்கும் விதமாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட பெண் சாமே தேவி இது குறித்து கூறுகையில், “அந்த சில விநாடிகள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. நான் ரயிலிலிருந்து கீழே விழப்போகிறேன் என்று உணர்ந்த அந்த நொடியிலேயே என் உயிர் போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால் போலீஸ் ஆதித்யா குமார் தைரியமாக வந்து என்னை இழுத்து காப்பாற்றினார். அவர் மட்டும் இல்லையென்றால் நான் இங்கே இப்போது பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டேன் என்றார்.