மு.க.ஸ்டாலினுடன் முற்றிலும் உடன்படுகிறேன்...இது ஜனநாயகத்திற்கு எதிரானது - கே.டி.ராமா ராவ்

தென் மாநிலங்களின் கருத்தை கேட்காமல் தொகுதி மறுசீரமைப்பு செய்வது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறுசூரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு. மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 39ல் இருந்து 31 ஆக குறையும். 8 நாடாளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என கூறினார்.
நான் மு.க.ஸ்டாலினுடன் முற்றிலும் உடன்படுகிறேன் மற்றும் அவருக்கு இந்த விஷயத்தில் வலுவான ஆதரவை வழங்குகிறேன். தேசத்திற்கு மிகத் தேவையான குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்திய தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது. தென் மாநிலங்களின் முயற்சியை கருத்தில் கொள்ளாமல் எல்லை தொகுதி மறுசீரமைப்பு செய்வது ஜனநாயகத்திற்கோ கூட்டாட்சிக்கோ பொருந்தாது. தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் அதனை மேற்கொள்ள நான் முன்மொழிகிறேன். தேச நிர்மாணத்தில் தெலுங்கானா மற்றும் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, தெலுங்கானா நாட்டின் மக்கள்தொகையில் 2.8% மட்டுமே உள்ளது, ஆனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% க்கும் அதிகமாக பங்களிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.