கே.டி.ராகவன் ஆபாச வீடியோ... சமூக ஊடகங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வெளியிடக்கூடாது என்று சமூக ஊடகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.கவின் மாநிலச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனுக்கு எதிராக, அதே கட்சியைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன், கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கே.டி.ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த சிவில் வழக்கில், மதன் ரவிச்சந்திரன், ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்,பத்திரிகைகள்,ஊடகங்கள், ஜான்தாஸ் உள்ளிட்டோர் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறு ஏற்படுத்தும் வீடியோ மற்றும் பதிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. பார்த்திபன், கே.டி. ராகவன் குறித்து வீடியோ மற்றும் பதிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.


