காந்தியை அவமதித்த ஆளுநருக்கு எதிராக வரும் 27ம் தேதி போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

 
ks alagiri

ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற 27.1.2024 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி  மாறியிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி | RSS Governor RN Ravi has become the  policy outreach secretary - KS Alagiri

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விடுதலை போராட்டத்திற்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள். பல்வேறு மதம், மொழி, ஜாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள். இவ்விருவரிடையே  பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும்.  இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார். 

ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள்! முடிவு கட்டும் நேரம் நெருங்கி  விட்டது''! -கே.எஸ்.அழகிரி | Tamil Nadu Congress Committee President KS  Alagiri criticize Tamil Nadu Governor Rn ...

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற 27.1.2024 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.