அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து டிச.6,7ல் டெல்லியில் ஆர்பாட்டம்- கிருஷ்ணசாமி
அருந்ததியர் 3 சதவீத உள் ஒதுக்கீடை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, " தமிழகத்தில் பட்டியல் இன சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் தேவேந்திர குல வேளாளர்கள்,அருந்ததியினர்,பறையர் சமுதாயம் உட்பட 70க்கும் மேற்பட்ட சமுதாயம் உள்ளது. ஆனால் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு என்று மட்டும் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியிருப்பது மற்ற 70 சமுதாய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வருடமாக அருந்ததியினர் உள்ஒதுக்கீடை எதிர்த்து போராடி வருகிறேன். ஆனால் அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவே கூடாது என்று நான் சொல்லி வருவது போல தவறான கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்கள். திடீரென்று அருந்ததியினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்று தான் கேள்வி எழுப்பி வருகிறேன்.
18 சதவீதத்தில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்காமல் தனியாக இட ஒதுக்கீடு வழங்கினால் பரவாயில்லை.ஆனால் உள் ஒதுக்கீடு என்று அறிவித்ததில் தான் பிரச்சனை. பட்டியல் இன மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு என்று 3% சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது 18% சதவீதத்தில் உள்ள மற்ற சமுதாய மக்களின் உரிமையை பறிக்கு வகையில் உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். டிசம்பர் 6 மற்றும் 7 ம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீடை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் மற்றும் கருந்தரங்கம் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.