"Thugs" என்றால் பொறுக்கிகள்.. ”Thug life” எனும் திரைப்படத்தின் பெயரை மாற்றுக- கிருஷ்ணசாமி

 
கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி

தனது திரைப்படத்திற்கு ”Thug life” எனும் பெயரை நடிகர் கமல் தவிர்க்க வேண்டும். மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “"Thug Life” எனும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட "Thug” எனும் பெயர் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபல்யப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல. ஏனெனில் "Thugs" என்றால் பொறுக்கிகள்- மூர்க்கர்கள்- போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris என்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். Thugs & Pindaris என்பவர்கள் ஔரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு, இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும். அவர்கள் மத ரீதியாகவோ, ன - மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாவர். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது. வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி அவர்களை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துவிட்டு அவர்களின் உடைமைகளைக் கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை. அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரப் பிரதேச சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களைப் போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.

கிருஷ்ணசாமி


ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோச்சியது. பின் அவர்கள் கடுமையான போருக்குப் பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்சச் சொச்சங்களாக சமுகத்தில் பரவியும், பதுங்கியும் கிடக்கும் மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை இச்சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது. அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்து, நகை உடைமைகளைக் கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி - பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமக் கொள்ளைகளில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது, கௌரவ- சாதியக் கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள் தான். அம்மூர்க்கப் போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது.

Thugs & Pindaris இந்தியச் சமூகத்தையே அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்தி வருகிற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை. அது போன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல!எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு ”Thug life” எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமல் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.