கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒரு ஆசிரியை கைது..
கிருஷ்ணகிரி அருகே 12 வயது தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தவழக்கில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் ( NCC Camp) நடைபெற்றது. இந்த முகாமில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். அந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள அடிட்டோரியத்தில் தங்கியிருந்து முகாமில் பங்கேற்று வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி முகாமில் கலந்துகொண்டு வழக்கம்போல் மாணவிகள் அடிட்டோரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த NCC பயிற்சியாளர் சிவராமன், 12 வயது சிறுமியை அதிகாலை 3 மணி அளவில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் புகாரளித்து உள்ளார். அதற்கு பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இதனால் பெற்றோர் வேதனை அடைவார்கள் என கூறி அனுப்பி வைத்திருக்கிறார். இதனை அடுத்து கடந்த 16ம் தேதி மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். உடனடியாக மாணவியின் தாயார் தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சோதனை செய்த போது, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
இதனை தொடந்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பர்கூர் அனைத்து மாகளில் காவல் நிலையத்தில் என்.சி.சி பயிற்றுநர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் மீது சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி உமா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடந்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், தாளாளர் சாம்சன் வெஸ்லி, என்.சி.சி பயிற்சியாளரான சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை முதல்கட்டமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பயிற்சியாளர் சுதாகர் ஆகிய இருவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்தார். பாலியல் வழக்கில் சிக்கியதை அடுத்து, சிவராமனை கட்சியில் இருந்து நீக்கி நேற்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். பின்னர் நேற்று இரவு சிவராமனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அப்போது தப்பியோட மூயன்றதில் கால் இடறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் பள்ளியில் பணிபுரியும் கோமதி என்கிற மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக இந்த வழக்கில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.