பாஜகவில் மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆவதற்கு தகுதி இல்லையா?- கே.பி. முனுசாமி
பாஜகவில் உள்ள 6 கோடி தொண்டர்களில் நரேந்திரமோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆவதற்கு தகுதி இல்லையா? என அண்ணாமலையிடம் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் இன்று அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்று சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் விளம்பர ஆட்சி தான் நடைபெறுகிறது. இதுவரை தமிழக முன்னேற்றத்திற்காக எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும், பாஜகவில் உள்ள 6 கோடி தொண்டர்களில் நரேந்திரமோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆவதற்கு தகுதி இல்லையா?
அரசியல் நாகரீகம் தெரியாமல் அண்ணாமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் போலவே ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். தான் தோன்றித்தனமாக மிரட்டுகின்ற தொணியில் அண்ணாமலை பேசக்கூடாது. காவல் நிலையத்தில் உக்காந்து கொண்டு ஊடகங்களை சந்திக்கின்றார் அண்ணாமலை. ராமர் கோவில் விவகாரத்தை அதிமுக அரசியலாக்க விரும்ப வில்லை. ஒரு தரப்பினர் ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்” என்றார்.